ஈரோடு ஆசனூரில் வாகனங்களை வழிமறித்த யானைகள்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை


ஈரோடு: ஆசனூர் வனப்பகுதியில் சாலையில் நின்று வாகனங்களை வழிமறித்த யானைகளால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் வசிக்கின்றன. சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதி வழியாக சத்தியமங்கலம் - திம்பம்- மைசூரு சாலை செல்கிறது. இந்த சாலையில் பயணிக்கும் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளின் ஓட்டுநர்கள், சாலையோரம் கரும்புகளை போடுவதை கடந்த காலங்களில் பழக்கமாக வைத்திருந்தனர். இவற்றை ருசித்துப் பழகிய யானைகள், கரும்பு லாரிகளை எதிர்பார்த்து சாலையோரம் காத்திருக்கத் தொடங்கின.

இதையறிந்த வனத்துறையினர், சாலையோரம் கரும்புகளை போடக்கூடாது என லாரி ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினர். இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இதனால், தற்போது கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள், முழுமையாக தார்ப்பாய் கொண்டு மூடி பயணிக்கின்றன. இந்நிலையில், கரும்பை சுவைத்துப் பழகிய யானைகள் திம்பம் சாலையில் வாகனங்களை மறித்து, கரும்பைத் தேடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

நேற்று முன் தினம் இரவு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்துக்குட்பட்ட செம்மண் திட்டு என்ற பகுதியில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 யானைகள், சாலையின் நடுவே நின்று அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து நின்றன. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தினர். அரை மணி நேரத்துக்கும் மேலாக யானைகள் சாலையில் குறுக்கே அங்கும், இங்கும் சுற்றி கொண்டிருந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதால் போக்குவரத்து சீரானது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, உணவு தண்ணீருக்காக சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று. எனவே வாகன ஓட்டிகள் மெதுவாகவும், எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். எதற்காகவும் வனச்சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது’ என்றனர்.

x