புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரிப்பு: இரு தொழிற்சாலைகளுக்கு சீல்


புதுச்சேரி: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகள் போன்ற 15 வகையான பொருட்களுக்கு புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது.

இப்பொருட்களை உற்பத்தி செய்வது, விற்பது, பயன்படுத்துவது சட்டத்துக்கு புறம்பானது. இருப்பினும் இந்தப் பொருட்களை சில தொழிற்சாலைகள உற்பத்தி செய்வது புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் கவனத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் ஆலோசனைப்படி வில்லியனூர் வட்டாட்சியர் சேகர் தலைமையில் வருவாய் அதிகாரிகள் நாகராஜன், பார்த்திபன் உள்ளிட்டோர் வில்லியனூர் மற்றும் ராமநாதபுரத்தில் அமைந்துள்ள இரு தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கைப்பைகள் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 2 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் தலைவர் ஜவஹர் ஒப்புதலுடன் இரண்டு தொழிற்சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

x