கோவை: சாயக்கழிவுகளால் பவானி ஆற்று தண்ணீர் நிறம் மாறியதைத் தொடர்ந்து, சிறுமுகை அருகே சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 3 சாயப் பட்டறைகளை மூட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு 17 குடிநீர் திட்டங்களுக்கு நீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல லட்சம் மக்கள் குடிநீர் பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலாங்கொம்பு பகுதியில் இருந்து சிறுமுகை வரை கடந்த ஒரு மாதத்திற்கு மேல் ஆற்று நீர் நிறம் மாறியது. மேலும், அந்த நீர் குடிக்க தகுதியற்றது என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். சிறுமுகை பகுதியில் இயங்கும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் தான் பவானி ஆற்று நீர் மாசடைவதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம், மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ் மற்றும் ஜடையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர், பொதுமக்கள் ஆகியோர் புகார் அளித்தனர். அதன்பேரில், திருப்பூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய பறக்கும் படை சுற்றுச்சூழல் பொறியாளர் லாவண்யா, கோவை வடக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சிபி சக்கரவர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செல்வகுமார், பவானிசாகர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பூங்காவனம் மற்றும் சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர், ஜடையம்பாளையம், பெள்ளேபாளையம் ஊராட்சி செயலர்கள் கொண்ட குழுவினர் நேற்றுமுன்தினம் சிறுமுகை பகுதிக்கு வந்தனர்.
இந்தக் குழுவினர் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை, பாதாள சாக்கடை நிலையம், ஆலாங்கொம்பு பழையூர், குத்தாரிபாளையம், ஆலாங்கொம்பு ரவுண்டானா பாலம், எலகம்பாளையம், எஸ்.ஆர்.எஸ்.நகர், மூலத்துறை சிறுமுகை பேரூராட்சி பகுதிகளில் ஆய்வு செய்து பவானி ஆற்று நீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். மேலும், பெள்ளேபாளையம் எஸ்.ஆர்.எஸ். நகரில் சட்ட விரோதமாக இயங்கிவந்த மூன்று சாயப்பட்டறைகளை உடனடியாக மூட உத்தரவு பிறப்பித்தனர். பவானி ஆற்று நீர் மாசடைந்துள்ளதால் ஜடையம்பாளையம் ஊராட்சி ஆலாங்கொம்பிற்கு திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.