மன்னிப்பு கடிதத்துடன் திருடிய சொகுசு பைக்கை திரும்ப விட்டு சென்ற திருடன்: திருப்புவனம் சுவாரஸ்யம்!


சிவங்கங்கை: திருடிய சொகுசு பைக்கை 3 நாட்களில் திருடிய இடத்திலேயே திருடன் விட்டுச் சென்ற சுவாரஸ்ய சம்பவம் திருப்புவனத்தில் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் டி.பழையூரைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்காக ரூ.2 லட்சத்தில் சொகுசு பைக்கை வாங்கி கொடுத்தார். இந்நிலையில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த அந்த பைக் பிப். 21-ம் தேதி திருடுபோனது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் அருகே அந்த பைக் இருந்துள்ளது.

மேலும் அந்த பைக்கில் ‘பிளாக் பாண்டா பயலுக’ என்ற பெயரில் மன்னிப்பு கடிதம் இருந்தது. அதில் அவசரத்துக்காக உங்கள் பைக்கை எடுத்து சென்றேன். அதை நினைத்து மிகவும் வருத்தப்பட்ட நான், 450 கி.மீ. சென்றுவிட்டு, மீண்டும் கொண்டுவந்து நிறுத்திவிட்டு செல்கிறேன். மேலும் ரூ.1,500 வைத்து சென்றுள்ளேன் என்று எழுதப்பட்டிருந்தது.

இதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த வீரமணி குடும்பத்தினர், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். திருடிய சொகுசு பைக்கை 3 நாட்களில் திருடிய இடத்திலேயே திருடன் விட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

x