கொடைக்கானலுக்கு பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில் எடுத்து சென்றால் வாகன பர்மிட் ரத்து!


திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்களை எடுத்து சென்றால் வாகன அனுமதிச் சீட்டு (பெர்மிட்) ரத்து செய்யப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் எச்சரித்துள்ளார்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் 5 லிட்டருக்கு குறைவான குடிநீர் மற்றும் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் செல்லும் மலையடிவாரத்தில் சோதனைச் சாவடி அமைத்தும், கொடைக்கானல் நகருக்குள் நுழையும் போது சோதனை மூலம் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலை வைத்திருந்தாலோ, பயன்படுத் தினாலோ பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் பிரிவு 84 மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 1989-ன் விதி 172 (3)-ன் படி, வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என அனுமதிச் சீட்டு (பெர்மிட்) நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்து சென்றாலோ அல்லது வாகனங்களில் எடுத்துச் செல்ல அனுமதித்தது கண்டறியப்பட்டாலோ, அவ்வாகனத்தின் அனுமதிச் சீட்டை (பெர்மிட்) ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

x