திண்டுக்கல்: கொடைக்கானலில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் அருவிகளில் நீர்வரத்து குறைந்து வருகிறது.
கொடைக்கானல் மலைப் பகுதியில், கடந்த சில நாட்களாக தரைப் பகுதியை போல் வெயில் வாட்டி வருகிறது. பகலில் அதிகபட்சம் 28 டிகிரி, இரவில் 18 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவுகிறது. கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து இலைகள் உதிர்ந்து வருகின்றன. மழையின்மையால் வெள்ளி நீர் வீழ்ச்சி, பியர்சோழா அருவி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, அஞ்சு வீடு அருவி, எலி வால் அருவி மற்றும் மலைக் கிராமங்களில் உள்ள அருவிகளில் நீர் வரத்து குறைந்துள்ளது. வெயில் தாக்கத்தால் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மழைக்காலத்தில் மலைச்சரிவுகளில் ரம்மியமாக காட்சியளிக்கும் பல அருவிகளும் நீர்வரத்து இன்றி தற்போது வறண்டு காணப்படுகிறது. குரங்குகள், காட்டு மாடுகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகளும் குடிநீருக்காக வனப்பகுதியை விட்டு நகர் பகுதிக்குள் வரத் தொடங்கி உள்ளன. கோடை காலம் தொடங்க இருப்பதால் வன விலங்குகளின் உணவு மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.