மயிலாடுதுறை: தரங்கம்பாடி வட்டம் காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள மாரியப்பா சீனிவாசா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் மதிய உணவுக்காக தரமற்ற அரிசி பயன்படுத்தப்பட்டதாக ஓரிரு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதியின் உத்தரவின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர், நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர், தரங்கம்பாடி குடிமைப் பொருள் வழங்கல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பள்ளியில் 21 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், 5 மாதங்களுக்குத் தேவையான அரிசி, அங்கு பாதுகாப்பற்ற இடத்தில் வைக்கப் பட்டிருந்ததால் நிறம் மாறியுள்ளது. அதே வேளையில், அந்த அரிசி இந்த மாதம் வழங்கப்பட்டதுதான் என நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் கோபிநாத்தால் உறுதி செய்யப்பட்டது.
மேலும், பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளர் ஆகியோர் இடையே நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக இந்த வீடியோ சமூக வளைதளங்களில் பகிரப்பட்டதும், இச்செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளர் மீது பொறையாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இதையடுத்து, சத்துணவு அமைப்பாளர் டி.பியூலாவை பணியிடை நீக்கம் செய்தும், சமையலர் டி.சகாயமேரியை பணியிட மாறுதல் செய்தும் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேற்று உத்தரவிட்டார்.