லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை: கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பு


தஞ்சை: லாரி உரிமையாளரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு (41). இவர் லாரிகள் மூலம் செங்கல், மணல் விற்பனை செய்து வருகிறார். இவர் 2013, பிப்.15-ம் தேதி வெண்ணாற்றங்கரையில் இருந்து மணல் ஏற்றி வந்தார். அப்போது மெலட்டூர் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய திருவாரூர் மாவட்டம் வலங்கைமானைச் சோ்ந்த சுகுமார், மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து, ரமேஷ் பாபு மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

அந்த வழக்கில் லாரியை பறிமுதல் செய்ததற்கான காரணம், லாரியில் இருந்த பொருட்கள் ஆகியற்றுக்கான ஆவணத்தை வழங்கவும், லாரியில் இருந்த நான்கு லோடுமேன்களை வழக்கில் சேர்க்காமல் இருக்கவும் ரமேஷ்பாபுவிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சமாக சுகுமார் கேட்டுள்ளர். மேலும், அந்தப் பணத்தை வெண்ணாறு பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் கொடுத்துவிடுமாறு கூறியுள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ்பாபு, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். இதன்பேரில் அதே ஆண்டு பிப்.21-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிவுரைப்படி, ரசாயனம் தடவப்பட்ட பணத்தை பெட்டிக் கடையில் ரமேஷ் பாபு கொடுத்துள்ளார். பின்னர், அந்தப் பணத்தை சுகுமார் பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கும்பகோணம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், சுகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

x