கோவில்பட்டியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: தேடப்பட்டவர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு


கோவில்பட்டி: கைக் குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் தொடர்புடையவரை போலீஸார் பிடிக்கச் சென்றபோது, தப்பியோடிய அவர் கீழே விழுந்து கால் முறிவுடன் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.

கோவில்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் கேரளாவில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி, 10 மாத கைக் குழந்தையுடன் வீட்டில் தனியாக வசிக்கிறார். இவர் மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார். போலீஸார் வழக்கு பதிந்து மர்ம நபர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், கோவில் பட்டி காந்தி நகரைச் சேர்ந்த கோமதி மகன் மாரியப்பன் (28), வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த வெயிலுமுத்து மகன் மாரிச் செல்வன் (27) ஆகியோர், இக்குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்கள் இருவரையும் போலீஸார் தேடி வந்தனர். கோவில்பட்டியில் நேற்று பதுங்கியிருந்த மாரியப்பன் போலீஸாரைக் கண்டதும் தப்பியோடினார். அவரை போலீஸார் விரட்டினர். இதில், கீழே விழுந்த அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாரியப்பன் அனுப்பி வைக்கப்பட்டார்.

மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா, கழுகுமலை காவல் ஆய்வாளர் பத்மாவதி மற்றும் போலீஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நேற்று காலை விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகள் மற்றும் தடயங்களைப் பதிவு செய்தனர். மோப்ப நாய் சுனோ வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தலைமறைவாக உள்ள மாரிச் செல்வனை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x