நாமக்கல்: மோகனூர் அருகே தலைமலை வெங்கடாஜலபதி கோயிலில் சிலைகள் மாயமான விவகாரத்தில் சிலர் தன்னை மிரட்டுவதாகக் கோயில் பூசாரி பி.பெரியசாமி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: மோகனூர் தாலுகாவுக்கு உட்பட்ட வடத்தூர் ஊராட்சி தலைமலையில் பிரசித்தி பெற்ற வெங்கடா ஜலபதி கோயில் உள்ளது. இக்கோயில் புராணகால சிறப்பு பெற்றதாகும். இக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு மேலாகப் பூசாரியாக நான் பணி புரிந்து வருகிறேன். இந்நிலையில், இக்கோயிலிருந்த பெண் சிலையுடன் கூடிய பாவை விளக்கு மற்றும் விளக்கு நாச்சியார் என அழைக்கப்படும் பழங்கால ஐம்பொன்னாலான சிலைகள் இருந்தன. இச்சிலைகளின் உண்மைத்தன்மை சோதித்தபோது, அந்த சிலைகள் ஐம்பொன் சிலை இல்லை என்பது தெரியவந்தது.
கோயிலில் ஏற்கெனவே இருந்த விலை மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை எடுத்து விட்டு, மாற்றாக அதேமாதிரியான உலோக சிலைகளை யாரோ வைத்திருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகார் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையும், காவல் துறையும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கோயிலில் தற்போது உள்ள சிலைகளை உண்மை சிலைகள் எனக் கூறும்படி எனக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே, எனது உயிருக்கும். உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.