திருப்பூர்: பாலித்தீன் மறுசுழற்சி ஆலையால் வெள்ளகோவில் அருகே மேட்டுப்பாளையம், நடுப்பாளையம் கிராமங்கள் பாதிப்புக்குள்ளாவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது. பல்வேறு பிரச்சினைகளுக்காக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.
வெள்ளகோவில் வட்டம் மேட்டுப்பாளையம், நடுப்பாளையம் கிராம மக்கள் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 15 ஆயிரம் பேர் வசிக்கிறோம். இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாலித்தீன் மறுசுழற்சி செய்யும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து கொடிய நச்சு வாயுக்கள் வெளியேறி காற்றின் தரம் மாசடைந்துள்ளது. இது தொடர்பாக ஆலை நிர்வாகத்துக்கு பலமுறை கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சுவாச நோய், புற்றுநோய் உட்பட் பல்வேறு உபாதைகளை சந்தித்துள்ளதுடன், பலர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆலை கீழ் பவானி ஆற்றின் அருகில் அமைந்திருப்பதால், ஆலைக்கு பயன்படாத ரசாயனம் மற்றும் பாலித்தீன் கழிவுகளை, இரவு நேரங்களில் கால்வாய் நீரில் கொட்டு கின்றனர். இதனால், தண்ணீர் மாசு ஏற்பட்டு குடிநீர் மூலமாக பல்வேறு உடல் உபாதைகள் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படுகின்றன. தற்போது உற்பத்தி அதிகளவில் நடந்து வருவதால், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறோம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் உயிரையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி 5-வது வார்டு திருக்குமரன் நகர், பாரதி நகர் அரசு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அளித்த மனு: எங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் மத்திய, மாநில அரசுகளின் மானியத்தில் ஏழை, எளிய மக்களுக்காகவும், மாற்றுத்தினாளிகளுக்காகவும் வழங்கப்பட்ட குடியிருப்புகளில், வசிக்கும் சுமார் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு வீட்டு வரி சம்பந்தமாக எந்த அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. குடியிருப்பு பராமரிப்புத் தொகை என்ற பெயரில் மாதம் ரூ.250 வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனைவருக்கும் ஆண்டு வீட்டு வரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில், ஆண்டுக்கு ரூ.3,073 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பராமரிப்பானது சுமாராக இருப்பதால், எங்களுக்கு உண்டான வீட்டு வரியை பாதியாக குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
அவிநாசியை அடுத்த கருக்கம்பாளையம் என்.பாலச்சந்திரன் அளித்த மனுவில், "எனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் 3,500 நேந்திர வாழைக்கன்றுகளை நட்டு வைத்து பயிர் செய்து வந்தேன். தற்போது 13 மாதங்களான நிலையில், வாழைகள் நன்கு குலை தள்ளிய நிலை இருந்தன. இன்னும் 50 நாட்களில் அறுவடை செய்ய காத்திருந்தேன். இதற்காக நடுவச்சேரி கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.2 லட்சம் கடன் பெற்றிருந்தேன். கடந்த 20-ம் தேதி கோயிலுக்கு சென்றுவிட்டு தோட்டத்துக்கு திரும்பிய போது, நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 200 வாழைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
மின் கம்பிகளில் வாழைகள் உரசுவதாக கூறி, எந்தவித தகவலும் அளிக்காமல் வாழைகளை மின்வாரிய ஊழியர்கள் வெட்டி சென்றுள்ளனர். இதனால் எங்களுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் அளித்திருந்தால், வாழைகள் சேதமடையாத வகையில் அப்புறப்படுத்தியிருப்போம். எங்கள் பட்டா நிலத்தில் 16 மின் கம்பங்கள் உள்ளன. இனி அவற்றை அப்புறப்படுத்தவும், வெட்டப்பட்ட வாழைகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.