புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சமூக ஆர்வலர் ஜகபர் அலி லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப் பட்டவர்களில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கனிமவள கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி, ஜன.17-ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கிரஷர் உரிமையாளர்கள் ராசு, ராமையா, ராசு மகன் தினேஷ், லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி ஓட்டுநர் காசிநாதன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சிபிசிஐடி போலீஸார் பரிந்துரையின் பேரில் ராசு, ராமையா, முருகானந்தம் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மு.அருணா நேற்று உத்தரவிட்டார்.