ஈரோடு உகினியம் அரசு பள்ளி சுற்றுச்சுவரை சேதப்படுத்திய யானை: அச்சத்தில் மாணவர்கள்


ஈரோடு: கடம்பூர் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை, அரசு பள்ளி சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்தியதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள உகினியம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசிக்கின்றனர். வனப் பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றை யானை, கடந்த இரண்டு மாத காலமாக இப்பகுதியில் உலா வருகிறது.

கிராமத்தில் உள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு கிராம மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. பொங்கலன்று விவசாயப் பயிருக்கு காவல் பணியில் இருந்த விவசாயி ஒருவரை யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு உகினியம் கிராமத்துக்குள் புகுந்த யானை, அரசு நடுநிலைப் பள்ளியின் சுற்றுச் சுவரை 2 இடங்களில் இடித்து சேதப்படுத்தியது. அதேபோல், பள்ளியில் நுழைவாயிலில் உள்ள இரும்பு கேட்டையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளது.

இது குறித்து உகினியம் கிராம மக்கள் கூறியதாவது: வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றை யானை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. விளைநிலங்களில் காவலுக்கு இருப்போரை விரட்டுவதால், கிராம மக்கள் அச்சத்துடன் உள்ளனர். அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில், இந்த ஒற்றை யானையை அடர் வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

x