திருநெல்வேலி: திசையன்விளை அருகே எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திசையன்விளையை அடுத்த இடையன்குடி அருகேயுள்ள ஆனைகுடியை சேர்ந்தவர் தேவதாஸ். அப்பகுதியில் கோழி மற்றும் பன்றிப்பண்ணை நடத்தி வருகிறார். இங்கு தூத்துக்குடி மாவட்டம் இடைச்சிவிளையை சேர்ந்த ஜான்சி பாப்பா (45) என்பவர் பணிபுரிந்து வந்தார்.
தேவதாசுக்கு சொந்தமான 2 எலெக்ட்ரிக் பைக்குகள் தோட்டத்தில் உள்ள ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பைக்குகளுக்கான பேட்டரிகளை சார்ஜ் ஏற்றுவதற்காக அங்குள்ள இன்குபேட்டர் இயந்திர அறையில் கழற்றி வைத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 15-ம் தேதி அந்த அறைக்கு ஜான்சி பாப்பா சென்றபோது திடீரென பேட்டரி வெடித்து சிதறியது. இதில் பலத்த காயமடைந்த ஜான்சி பாப்பா திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து திசையன்விளை போலீஸார் விசாரிக்கின்றனர்.