மதுரையில் பரிதாபம்: ரயில் சக்கரத்தில் சிக்கி கேரளாவை சேர்ந்த ரயில்வே அதிகாரி உயிரிழப்பு


அனுசேகர்

மதுரை: திருமங்கலம் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்ற கேரளாவைச் சேர்ந்த ரயில் நிலைய அதிகாரி தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் கீழாரூர் எடவாஸ் ஓட்டசேகரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அனுசேகர் (32). இவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் நிலைய அலுவலராகப் பணியில் சேர்ந்தார். தற்போது, அவர் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரயில் நிலைய அதிகாரியாக பணியாற்றி வந்தார். இதனால், அப்பகுதியிலேயே தனியாக வீடு பிடித்து தங்கி இருந்தார். அவ்வப்போது, மனைவி, குழந்தையை பார்க்க சொந்த ஊருக்குச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், பணி நிமித்தமாக மதுரைக்குச் செல்ல அனுசேகர் திட்டமிட்டார். அதன்படி, செங்கோட்டை - ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கள்ளிக்குடி நிலையத்துக்கு வந்தபோது, நேற்று காலை 8.30 மணிக்கு இன்ஜின் அருகிலுள்ள பெட்டியில் ஏற தயாரானார். திடீரென ரயில் புறப்பட்டதால், நிலை தடுமாறி தண்டவாளத்துக்குள் விழுந்தார். இதில் ரயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இதையடுத்து, ரயில் உடனே நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, விருதுநகர் ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர்.

x