தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை


சென்னை: திருப்பூரில் ஒடிசாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் குழந்தை கண் எதிரில், 3 பேர் கொண்ட கும்பலால் கத்தி முனையில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியக்கிறது என மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ”திருப்பூரில் ஒடிசாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் குழந்தை கண் எதிரில், 3 பேர் கொண்ட கும்பலால் கத்தி முனையில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது. குற்றச் செயலில் ஈடுபட்ட மூன்று பேரும் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டிருக் கின்றனர். இந்த வன் செயலில் ஈடுபட்டவர்கள் சட்ட ரீதியாக கடும் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். திருப்பூரில் 2 லட்சத்துக் கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வேலை தேடி வரும் தொழிலாளர்களுக்குத் தமிழ்நாடு அரசே வழிகாட்டும் நிலையங்களை உருவாக்கித் தந்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்” என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

x