தோப்பு வெங்கடாசலத்துக்கு பதவி வழங்கியதால் திமுகவில் உட்கட்சி பிரச்சினையா? - அமைச்சர் முத்துசாமி பதில்


பெருந்துறை: ஈரோடு மத்திய மாவட்ட செயலாளர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு மத்திய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், பெருந்துறையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, எம்பி அந்தியூர் செல்வராஜ், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், ஈரோடு எம்.பி. பிரகாஷ், எம்எல்ஏ.க்கள் வெங்கடாசலம், சந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிர்வாக வசதிக்காக, ஈரோடு மாவட்டத்தை, ஈரோடு தெற்கு, வடக்கு, மத்திய மாவட்டங்களாக பிரித்து திமுக தலைவர் நிர்வாகிகளை அறிவித்துள்ளார். ஈரோடு மத்திய மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் மாவட்டங்களை பிரித்து புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்யும்போது, சிறிய அளவிலான கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம். இதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. கட்சியினர் அனைவரும் திமுக தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள். எனவே, கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதை கடைபிடிப்பது தான் ஒரே நோக்கம். எனவே, ஈரோடு மத்திய மாவட்ட செயலாளர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும்.

ஆடுகளுக்கு இழப்பீடு

எதிர்காலத்தில் தெரு நாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தெரு நாய்களை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் நலன் காக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈரோடு மத்திய மாவட்ட செயலாளராக தோப்பு வெங்கடாசலம் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, தனது ஒன்றிய செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கே.பி.சாமியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரிடம் பேசியபோது, ‘எனது ராஜினாமா முடிவை கட்சிக்கு தெரிவித்து விட்டேன். அவர்கள் இதுவரை அதனை ஏற்கவில்லை’ என்றார்.

x