மேலூர் அருகே சிப்காட் திட்டத்துக்கு எதிர்ப்பு: 18 கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றம்!


மதுரை: மேலூர் வட்டத்திலுள்ள கல்லாங்காட்டில் சிப்காட் திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அத்திட்டத்தை தமிழக அரசு கைவிடக்கோரி 18 கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் வஞ்சிநகரம், பூதமங்கலம், கொடுக்கம்பட்டி ஊராட்சிகள் இணையும் இடத்தில் கல்லாங்காடு பகுதி உள்ளது. இப்பகுதியிலுள்ள 420 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்கூடங்கள் அமைக்கப்படும் என, சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. தற்போது, அதற்கான நில அளவீடு பணியும் நடப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிப்காட் திட்டம் குறித்து விவாதித்து முடிவெடுக்கும் வகையில், கல்லாங்காடு பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள அழகுநாச்சி அம்மன் கோயில் முன்பாகக் கூடி நேற்று விவாதித்தனர்.

கூட்டத்தில் பொதுமக்கள் கூறியதாவது: கல்லாங்காடு பகுதியிலுள்ள நாகப்பன்சிவன்பட்டி, மூவன்செவல்பட்டி, கம்பாளிப்பட்டி, நலங்குண்டுப் பட்டி, உசிலம்பட்டி, தாயம்பட்டி, கண்டுவபட்டி, ஒத்தப்பட்டி, முத்துப்பட்டி நாட்டார்மங்கலம், நல்லசுக்காம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கல்லாங்காட்டை நம்பியே வாழ்கிறோம். இப்பகுதியை ஆடு, மாடு மேய்ச்சலுக்காக பயன்படுத்துகின்றனர். இப்பகுதியில் சிப்காட் அமைத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

மேலும், கல்லாங்காடு பகுதியில் பெய்யும் மழை நீரானது, சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அதிகாரக் கண்மாய், கிராந்த கண்மாய், வேம்புலி கண்மாய், சுந்தரம் கண்மாய், துவரங்குண்டு, பொன்னுச்சிகுளம், பிராந்தன் கண்மாய், கம்பாளிக் கண்மாய்களுக்குச் செல்வது முற்றிலும் பாதிக்கப்படும். இதன்மூலம் கடலை, நெல், தென்னை, பருத்தி, காய்கறிகள், பயறு வகைகள் உள்ளிட்ட விவசாயமும் பாதிக்கப்படும்.

அதேபோல், இச்சுற்றுவட்டார மக்கள் வழிபடும் 25-க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள், பாரம்பரிய விழாக்கள், 500 ஏக்கர் பரப்பிலான விவசாயம், 200 ஏக்கர் மேய்ச்சல் நிலம், 20-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் பாதிக்கப்படுவதுடன், மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.

எனவே, பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் சிப்காட் திட்டத்தை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும். மக்களுக்கு பயன்பாடு இல்லாத இடத்தை தேர்ந்தெடுத்து சிப்காட் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் கூட்டத்தில், சிப்காட் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது, சிப்காட் திட்டத்தை எதிர்த்து சுற்றுவட்டார 18 கிராம மக்கள் கூட்டமைப்பு உருவாக்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

ஏற்கெனவே, மேலூர் பகுதியில் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களால் அத்திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சிப்காட் திட்டத்துக்கும் மேலூர் பகுதியிலுள்ள 18 கிராம மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

x