அரசு சமுதாய நலக்கூடத்தை தனி நபர்கள் நிலத்தி்ல் கட்டி மோசடி: கன்னியாகுமரியில் அதிர்ச்சி


கன்னியாகுமரி: உன்னங்குளத்தில் அரசு சமுதாயக் கூடத்தை தனி நபர்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டி மோசடி செய்தது தொடர்பாக எஸ்.பி.யிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க போலீஸார் தயக்கம் காட்டுவதால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

குமரி மாவட்டம் உன்னங்குளம் கிராமத்தை சேர்ந்த வாசகர் `இந்து தமிழ் திசை’ உங்கள் குரல் சேவையில் தொடர்பு கொண்டு கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச் சந்தை ஊராட்சிக்குட்பட்ட உன்னங்குளம் கிராமத்தில் அதிமுகவை சேர்ந்த விஜயகுமார் எம்.பி.யாக இருந்தபோது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.

அரசு விதிமுறைப்படி தமிழக ஆளுநர் பெயருக்கு அனுமதிக்கப்பட்ட 13 சென்ட் இடத்தில் சமுதாயக்கூடம் அமைப்பதற்கு குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், ஆளுநர் பெயரில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் சமுதாயக் கூடத்தை கட்டுவற்கு பதிலாக, அப்போது பொறுப்பில் இருந்தவர்கள் திட்டமிட்டு மோசடி செய்யும் நோக்கில் அவர்களது சொந்த நிலத்தில் அரசு சமுதாயக்கூடத்தை கட்டியுள்ளனர்.

இதற்காக தங்களது இடத்துக்கு ஊர் பொதுமக்களிடம் இருந்து அவர்கள் பணமும் பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் அரசு சமுதாயக்கூடம் அமைந்துள்ள இடத்தை இதுவரை ஆளுநர் பெயருக்கு எழுதி கொடுக்காமல், அந்த கட்டிடத்தை அபகரிக்கும் வகையில் ஊர் மக்களை மிரட்டி வருகின்றனர்.

இதுகுறித்து ஊர் நிர்வாகிகள் கடந்த மாதம் 18-ம் தேதி குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினிடம் ஆதாரத்துடன் புகார் அளித்தனர். குமரி மாவட்ட ஆட்சியர், மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குளச்சல் ஏஎஸ்பிக்கு எஸ்.பி. ஸ்டாலின் உத்தவிட்டார். ஏஎஸ்பி பிரவீன் கவுதம் இருதரப்பிலும் முதல்கட்ட விசாரணை மேற்கொண்ட நிலையில், மோசடி புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க அவரது அலுவலகத்தில் உள்ள சில போலீஸார் எதிர்மனுதாரரிடம் பேசி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக தெரிகிறது.

எஸ்.பி. உத்தரவிட்ட பின்னரும் மோசடி புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் புகாரை முடித்துக் கொள்ளுமாறு புகார் அளித்தவர்களிடம் போலீஸார் வற்புறுத்தி வருகின்றனர். போலீஸார் மீது நம்பிக்கை இன்றி கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, அரசு சமுதாய நலக்கூடத்தை அபகரிக்க முயல்பவர்கள் மீது எஸ்.பி. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

x