பொன்பாடி - புத்தூர் மார்க்கத்தில் கணினிமயமாக்கப்பட்ட நவீன சிக்னல் முறை


சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் பொன்பாடி - புத்தூர் மார்க்கத்தில் கணினிமயமாக்கப்பட்ட நவீன தானியங்கி சிக்னல் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அரக்கோணம்- புத்தூர் நிலையங்களுக்கு இடையே அதிக ரயில்களை இயக்க முடியும் என்றும், அரக்கோணம் - ரேணிகுண்டா இடையே ரயில்களின் சராசரி வேகம் மேம்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் பல்வேறு முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரயில் தண்டவாளங்களை வலிமைப்படுத்துவது, நவீன சிக்னல் முறை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. அந்த வகையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் பொன்பாடி - நகரி - வேப்பகுண்டா - புத்தூர் மார்க்கத்தில் 23.11 கி.மீ. தொலைவில் கணினிமயமாக்கப்பட்ட நவீன தானியங்கி சிக்னல் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ”இந்த மார்க்கத்தில் பழைய சிக்னல் முறையை மாற்றி, கணினிமயமாக்கப்பட்ட நவீன சிக்னல் முறை ஏற்படுத்தப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தம் 30 தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக, இந்த மார்க்கத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு ரயில்களை இயக்க முடியும். இங்கு மின்சாதனங்களை கவாச் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன தானியங்கி சிக்னல் முறை நிறுவப்பட்டது மூலமாக, ஒரே நேரத்தில் இரு மார்க்கமாக 30 ரயில்களை இயக்க முடியும். அதாவது, அரக்கோணம் நேக்கி 13 ரயில்களும், ரேணிகுண்டா நோக்கி 17 ரயில்களும் இயக்க முடியும்.அரக்கோணம் - புத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அதிக ரயில்களை இயக்க முடியும். மேலும், அரக்கோணம் - ரேணிகுண்டா இடையே ரயில்களின் சராசரி வேகம் மேம்படும்” என்ரு அவர்கள் கூறினர்.

x