தேசிய சாலை பாதுகாப்பு மாதம்: பொள்ளாச்சியில் தலை கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணி


தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பொள்ளாச்சி: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் தலை கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து போலீஸார் உள்ளிட்ட துறைகள் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி கோவை சாலை, காந்தி சிலை, அரசு மருத்துவமனை, உடுமலை சாலை வழியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை வந்தடைந்தது. இப்பேரணியை பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) கோகுலகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 20-க்கும் மேற்பட்ட கார்கள் கலந்து கொண்டன.

பேரணியை தொடங்கி வைத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) கோகுலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”கோவை மாவட்டத்தை சாலை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கென பல்வேறு முயற்சிகள் எடுக்கப் பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாணவர்களை வைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அரசின் வழிகாட்டுதலின்படி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இருசக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும், காரில் செல்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், வாகனங்களில் அதிவேகமாக செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மாணவர்களிடைய விளக்கி கூறியுள்ளோம். இதனை பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது” என்று கோகுலகிருஷ்ணன் கூறினார்.

x