பழநி: பழநி இடும்பன் குளத்தில் நீராடும் போது தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிய பக்தர்கள் 4 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா பிப்.5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பாத யாத்திரையாக வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் இடும்பன் குளம், சண்முக நதியில் புனித நீராடிவிட்டு பழநி மலைக்கோயிலுக்கு செல்வது வழக்கம். தைப்பூசத் திருவிழாவையொட்டி, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கையாக இடும்பன் குளம், சண்முக நதியில் தீயணைப்பு வீரர்கள் கண்காணிப்பு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (ஜன 31) காலை குளத்தில் நீராடிய மூன்று பெண்கள், ஒரு சிறுவன் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். அவர்களின் கதறல் சத்தம் கேட்டு, அருகில் பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு நான்கு பேரையும் உயிருடன் மீட்டனர். விசாரணையில், நீரில் மூழ்கியவர்கள் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (32), அழகுத் தாய் (30), சத்யா (20), குபேந்திரன் (7) என்பது தெரியவந்தது.
இதேபோல், நேற்றும் (ஜன.30) குளத்தில் மூழ்கிய சிவகங்கையைச் சேர்ந்த 3 பெண்களை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது. இடும்பன் குளத்தில் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தும் தடுப்பை தாண்டிச் சென்று பக்தர்கள் ஆபத்தான முறையில் குளித்து வருகின்றனர். ஆபத்தான கட்டத்தில் பலரின் உயிரை காப்பாற்றி வரும் தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.