ராமேசுவரம்: ராமேசுவரம் நகராட்சியின் நிர்வாகத்தை கண்டித்தும், அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமேசுவரத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் இருப்பதால் ராமநாத சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல், ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களும், மருந்துகளும் இல்லாத காரணத்தால், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் மிகுந்த அவதிப்படுகின்றனர்.
ராமேசுவரம் நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை உடனே செய்ய வேண்டும், ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமேசுவரம் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் கடம்பூர் ராஜு கூறியதாவது, ”ராமேசுவரம் மிக முக்கிய ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்களில் ஒன்று என்பதால் இங்கு போதிய அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து கொடுப்பதுடன் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக போதிய மருத்துவரையும் மருந்துகளையும் வழங்க வேண்டும். தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை ஐசியூவில் உள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கு துறை சார்ந்த எந்த விஷயமும் தெரிய வருவதில்லை, சட்டமன்றத்தில் துறை சார்ந்து கேள்வி எழுப்பினாலும் பதில் அளிக்க அமைச்சரால் முடியவில்லை. திமுக பல்வேறு ஏமாற்று வாக்குறுதிகளை மக்களிடம் அளித்து வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வு ரத்து, கச்சத்தீவு மீட்பு, உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத அரசாக இருந்து வருகிறது.
பெரியாரால் தமிழகத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் அவரைப் பற்றி அவதூறாக பேசி ஒரு விளம்பர அரசியலை தமிழகத்தில் சீமான் செய்து வருகிறார்” என்று கடம்பூர் ராஜு கூறினார்.