பொள்ளாச்சி: கிராம ஊராட்சிகளை பொள்ளாச்சி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மூன்று கிராம மக்கள், சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பொள்ளாச்சி நகராட்சி மொத்தம், 13.87 சதுர கி.மீ., பரப்பு கொண்டது. 1983 ஏப்ரல் 1-ம் தேதி முதல், சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகரின் வளர்ச்சி மற்றும் வருமானத்தை பெருக்கும் வகையில் அருகேயுள்ள கிராமங்கள் மற்றும் பேரூராட்சிகளையும் இணைத்து எல்லை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. கடந்த, 2017ல் ஆச்சிப்பட்டி, கிட்டசூராம்பாளையம், புளியம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஜமீன் முத்துார், தாளக்கரை உள்ளிட்ட ஊராட்சிகளையும், சூளேஸ்வரன்பட்டி மற்றும் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிகளை நகராட்சியுடன் இணைத்து எல்லை விரிவாக்கம் செய்யலாம் என வரைபடத்துடன் கூடிய கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நகராட்சியுடன் இணைக்கப்படும் ஊராட்சிகள் குறித்த உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ஜமீன் முத்துார், புளியம்பட்டி, சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கிட்டசூராம்பாளையம், ஆச்சிப்பட்டி ஊராட்சிகள் இணைக்கப்படும், என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இம்மாதம் தொடக்கத்தில் அரசு வெளியிட்ட அறிவிப்பில், சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, புளியம்பட்டி, கிட்டசூராம்பாளையம், ஆச்சிப்பட்டி ஆகிய ஐந்து ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு வந்தனர்.
இந்நிலையில் இன்று மாக்கினாம்பட்டி, புளியம்பட்டி, சின்னாம்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யாவிடம், பொள்ளாச்சி நகராட்சியுடன் தங்கள் கிராமங்களை இணைக்கக் கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது: 'மாக்கினாம்பட்டி, புளியம்பட்டி, சின்னாம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சிகளில், தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். நகராட்சியுடன் இணைக்கும் போது, இந்த திட்டத்தில் பயனடைய முடியாது. மேலும், நகராட்சியில் இருப்பது போன்று, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் ஊராட்சியிலும் உயரும். புதிதாக வீடு கட்ட அனுமதி பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படும். அதனால், ஊராட்சி பகுதியில் உள்ள மக்கள், நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும், ஊராட்சிகள் தொடர்ந்து கிராம ஊராட்சிகளாகவே தொடர வேண்டும் எனவும் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யாவிடம் வலியுறுத்தி உள்ளோம்' என்றனர்.