புதுச்சேரி: நிர்வாக அதிகாரி- அறங்காவலர் குழு இடையே கருத்துவேறுபாட்டால் பாதுகாப்பு கேட்டு கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் கோயில் முன்பாக இன்று திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
புதுவை காராமணிக்குப்பம் புவன்கரே வீதியில் ஸ்ரீசுந்தர விநாயகர், ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு புதுவையில் உள்ள கோயில்களை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதேபோல இந்த கோயிலுக்கும் மின்துறை அதிகாரி தணிகாசலம் கோயில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவருக்கும், ஏற்கனவே இருந்த அறங்காவலர் குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் கோயில் தொடர்பாக நடந்த 2 கூட்டங்களிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று கோயில் நிர்வாக அதிகாரி தணிகாசலம் தலைமையில் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அறங்காவலர் குழுவினருக்கும், நிர்வாக அதிகாரிக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கோயில் வளாகம் என பாராமல் சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை கோயில் அபிஷேகம், ஆராதனை முடிந்தவுடன் கோயிலில் பணியாற்றும் 4 அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் 4 பேர் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
கோயில் வாசலில் அமர்ந்து கோயில் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டி கோஷம் எழுப்பினர். இதனால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்த உருளையன்பேட்டை போலீஸார் கோயிலுக்கு வந்தனர். இதுதொடர்பாக புகார் தெரிவிக்கும்படியும், பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்கும்படியும் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.