பல தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோக்கள்: புதுவை பேரவைத் தலைவர் செல்வம் சாடல்!


புதுச்சேரி: பல தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோவாக இருக்கின்றனர் என்று பேரவைத் தலைவர் செல்வம் சாடியுள்ளார்.

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக மாநாட்டில் மத்திய அமைச்சர் முருகன், கல்வி அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் துணை வேந்தர்கள், கல்வியாளர்கள் பங்கேற்று இன்று நடந்த சர்வதேச உளவியல் மாநாட்டில் பேரவைத் தலைவர் செல்வம் பேசியதாவது: "அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே பல்வேறு வித்தியாசம் உள்ளது. மாணவர்களின் சிந்தனைகள், செயல்களிலும் வித்தியாசம் உள்ளது. பல தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை 9ம் வகுப்பு படிக்கும் போதே 10ம் வகுப்பு பாடத்தை முடித்து விடுகின்றனர்.

அதோடு பொது தேர்வுக்கு 2 ஆண்டுகளாக மாணவர்களை தயார்படுத்துகின்றனர். இதனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு உடல் ரீதியான பயிற்சி, மன பயிற்சி கிடைப்பதில்லை. பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் டாக்டர்கள், என்ஜினியராக வேண்டும் என்பதே எண்ணம். காலை 7.30 மணிக்கு பள்ளி செல்லும் மாணவர்கள் இரவு 9.30 மணிக்குத் தான் திரும்புகின்றனர். இதனால் பல தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோவாக உருவாகிவிடுகின்றனர்.

பல தனியார் பள்ளிகளில் படிப்போர் அப்படிதான் இருக்கின்றனர். துணை வேந்தர்கள் ஆய்வு நடத்தி பார்த்தாலே தெரியும். அவர்களுக்கு உலக நடப்போ, பொது அறிவோ இல்லை. அதே நேரத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உடல் ரீதியான பயிற்சியும், மன ரீதியிலான பயிற்சியும் கிடைக்கிறது. புதுவையில் சமீபமாக முதியோர் இல்லங்கள் பெருகி வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் புதிதாக 20 முதியோர் இல்லங்கள் உருவாகியுள்ளது.

இங்கு கைவிடப்பட்ட பெற்றோர்கள் அதிகரித்து உள்ளனர். அவர்களின் குழந்தைகள் மாதம் ரூ.5 லட்சம் வரை சம்பாதிப் பவர்களாக உள்ளனர். ஆனால் பெற்றோருக்கு ஒரு வேளை உணவு அளிக்க முடியாதவர்களாக உள்ளனர். இதுபோன்ற மாநாடுகள் அவர்களின் சமுதாய கடமைகளை உணர்த்த வேண்டும்” என்று பேரவைத் தலைவர் செல்வம் குறிப்பிட்டார்.

x