கடலூர்: கடலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சிஐடியு சார்பில் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
15-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடித்து, 01.09.2023 முதல் அரியர்ஸ் வழங்கிட வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 110 மாத பஞ்சப்படி மற்றும் பண பலன்களை வழங்கிட வேண்டும், 01.04.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தேர்தல் வாக்குறுதிபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சிஐடியு சார்பில் இன்று (ஜன.21) காலை கடலூர் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு சங்க சிறப்பு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். தலைவர் மணிகண்டன், பொதுச் செயலாளர் முருகன், துணை பொது செயலாளர்கள் கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் அரும் பாலன், நிர்வாகிகள் நடராஜன், ராஜ், விரைவு போக்குவரத்து மத்திய சங்கத்தின் துணைத் தலைவர் சிவகுமார், பொருளாளர் கணேசன், பணிமனை செயலாளர் ஞானசக்தி, பொருளாளர் தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜவான் பவன் சாலைக்கு ஊர்வலமாக சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து போராட்டக்காரர்கள் இம்பீரியல் சாலையிலும், சிலர் உழவர் சந்தை முன்பும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் நடந்து, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 பேரை திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.