குரோம்பேட்டையில் சுரங்க பாதைக்கு கூடுதல் நிலம் ஒதுக்க வேண்டும்: எம்எல்ஏ கருணாநிதி கோரிக்கை


பல்லாவரம்: குரோம்பேட்டை ராதா நகர் ரயில்வே கேட் அருகே சுரங்கப் பாதை அமைக்கும் பணி கடந்த 2007ல் சுரங்கப் பாதைப் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் ரயில்வே பகுதியில் பணிகள் முடிந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டன.

பின்னர் 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ.15.47 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு நெடுஞ்சாலைத் துறை பணிகள் தொடங்கின. தற்போது 80 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. சுரங்கப் பாதை மையப் பகுதியில் நடை மேம்பாலத்தில் துாண்கள் உள்ளதால், அவற்றை அகற்ற வேண்டியுள்ளது. மேற்கு பகுதியில் 20 சதவீத பணிகள் மட்டுமே உள்ளன.

இந்நிலையில் சுரங்கப் பாதை வழியாக வெளியே வரும் ஜிஎஸ்டி சாலையில் இட நெருக்கடி உள்ளதால் கூடுதல் இடம் தற்போது தேவைப்படுகிறது. இதனால் பணிகள் முடிவடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி தெற்கு ரயில்வே கோட்ட மேலாளரை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதி நேரில் சந்தித்து சுரங்கப் பாதைக்கு கூடுதல் இடம் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்து மனு கொடுத்தார்.

அந்த மனுவில் ராதா நகர் சுரங்கப் பாதைக்காக ஜிஎஸ்டி சாலையில் உள்ள சந்திப்பை அகலப்படுத்த 3 மீட்டர் அகலம் மற்றும் 30 மீட்டர் நீளத்துக்கு ரயில்வே நிலம் தேவைப்படுகிறது. எனவே இதை ஒதுக்கி கொடுத்தால் சுரங்கப் பாதையை விரைந்து முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவர முடியும். எனவே கூடுதல் ரயில்வே நிலத்தை பயன்படுத்த நெடுஞ்சாலைத் துறைக்கு தேவையான அனுமதியை வழங்க வேண்டும்” என்று மனுவில் கூறியுள்ளார். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே அதிகாரி அளித்துள்ளார்.

x