வத்தலகுண்டு: வத்தலகுண்டு அருகே நடந்த திருவிழாவில் கருப்பணசுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான அரிவாள்களை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே முத்துலாபுரம் கிராமத்தில் கருப்பணசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் மூன்றாம் தேதி திருவிழா நடைபெறும். இன்று நடைபெற்ற திருவிழாவில் வத்தலகுண்டு பகுதி மட்டுமல்லாது, வெளியூர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் அரிவாள்களை நேர்த்திக்கடனாக கோயிலில் செலுத்தினர்.
முன்னதாக ஊர் எல்லையில் இருந்து அரிவாள்களை ஏந்தியபடி கோயில் நோக்கி ஊர்வலமாக சென்றனர். கோயிலை வந்தடைந்து சுவாமிதரிசனம் செய்து அரிவாள்களை கோயிலில் வைத்துவிட்டு சென்றனர். முன்னதாக கருப்பணசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அரிவாள்களை காணிக்கையாக கோயிலுக்குச் செலுத்துவது குறித்து முத்துலாபுரம் கிராம மக்கள் கூறுகையில், பல நூறு ஆண்டுகளாக அரிவாள் செலுத்தும் வழக்கம் இருந்துவருகிறது. விபத்துக்களில் சிக்காமல் இருக்கவும், விபத்துக்களில் சிக்கி உயிர் தப்பியவர்களும் கோயிலுக்கு அரிவாள்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். விபத்துகள் நடைபெறாமல் இருக்கவும் கருப்பணசுவாமியை வேண்டிக்கொள்கின்றனர்.
இரண்டு அடி முதல் 16 அடி வரை அரிவாள்களை செய்து கோயிலுக்கு செலுத்துகின்றனர். ஒரே பிடியில் பல முக அரிவாள்களையும் கொண்டு வருகின்றனர். இதுபோல் முந்தைய ஆண்டுகளில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய லட்சக்கணக்கான அரிவாள்கள் கோயில் வளாகத்தில் குவிந்து கிடக்கிறது. இந்த ஆண்டு திருவிழாவில் ஆயிரக்கணக்கான அரிவாள்கள் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்டுள்ளது.