கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கண்ணாடி இழை பாலத்தில் அலைமோதும் கூட்டம்!


கண்ணாடி இழை பாலத்தில் குமரி ஆட்சியர் அழகுமீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகர்கோவில்: பண்டிகைகால தொடர் விடுமுறையால் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். கண்ணாடி இழைப் பாலத்தை காண்பதற்கு அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உலக நாடுகளிலிருந்தும், வெளிமாநிலங்கள் வெளிமாவட்டங்களிலிருந்தும் கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். தற்போது பொங்கல் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த பண்டிகைக் கால விடுமுறை, சனி, ஞாயிறுடன் ஒரு வாரத்திற்கு மேல் சுற்றுலா திட்டத்தை வகுத்து ஏராளமானோர் கன்னியாகுமரி வந்துள்ளனர்.

கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகளின் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக கடலில் படகு சவாரி செய்து விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை பார்வையிடுவது உள்ளது. கன்னியாகுமரி சுற்றுலா வரும்போது திருவள்ளுவர் சிலையைக் காண வேண்டும் என்ற ஆவல் இருக்கும் சுற்றுலாப் பயணிகள் நேரடியாக அருகில் சென்று காண முடியாமல் விவேகானந்தர் பாறையிலிருந்து கண்டுகளித்தனர்.

எனவே சுற்றுலாப் பயணிகளின் மனக்குறையைப் போக்கும் வகையில் விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைத்து சுற்றுலாப் பயணிகள் அய்யன் திருவள்ளுவரைக் கண்டு களித்திட ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது. இதை கடந்த டிசம்பர் 30ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து அய்யன் திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு பெருமிதம் அடைகின்றனர். தற்போது பண்டிகை கால விடுமுறையால் கன்னியாகுமரியில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் கண்ணாடி இழை பாலத்தில் நடந்து சென்று செல்பி எடுத்து மகிழ்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சீஸனை முன்னிட்டு இன்று குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கன்னியாகுமரி கண்ணாடி இழை பால பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில்; பொங்கல் உள்ளிட்ட விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவதால் அவர்களின் வசதிக்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்தின் படகு சேவைக்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை(17ந் தேதி) வரை இரவு 7மணி வரை படகு சேவைக்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அல்லாத நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 6 மணி வரை செயல்படும்.

மேலும் அய்யன் திருவள்ளுவர் சிலையினைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் அவர்களுக்கு வழிகாட்டிட காவல்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக சுமார் 35 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு காலை 6 மணி முதல் இரவு வரை பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து இன்று கண்ணாடி இழை தரைத்தளம் பாலம் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் அய்யன் திருவள்ளுவர் சிலையினை காண வந்த சுற்றுலாப் பயணிகளில் சிலர் தாங்கள் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தபோது அய்யன் திருவள்ளுவர் சிலையினை அருகில் சென்று காண முடியாமல் விவேகானந்தர் பாறையில் இருந்து மட்டுமே கண்டு களித்ததாகவும், தற்போது கண்ணாடி இழை பாலம் அமைத்ததன் வாயிலாக, அய்யன் திருவள்ளுவர் சிலையினை நேரில் சென்று பார்வையிட்டபோது, சிலையின் வடிவமைப்பு தங்களை பிரமிக்க வைத்தது எனவும் தெரிவித்தனர். மேலும், கருங்கல்லில் திருக்குறளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் செதுக்கியிருப்பதை வாசிக்கும் போது திருவள்ளுவரின் மேல் பற்று ஏற்படுவதோடு ஒரு மனிதனின் வாழ்க்கை நெறி எப்படி இருக்க வேண்டும் என்பதையும், சுற்றுச்சூழல், உழவு உள்ளிட்டவைகள் குறித்தும் தெரிந்து கொள்ள முடிகிறது.

இது இளைய சமுதாயத்திற்கும் வருங்கால சமுதாயமும் அய்யன் திருவள்ளுவர் குறித்து தெரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் கடலுக்கு நடுவில் கண்ணாடி இழை பாலம் வழியாக நடந்து செல்லும் போது மனதில் இனம்புரியாத பயம் கலந்த பரவசம் ஏற்படுவதோடு கடலின் அலைகளைக் கண்டு ரசித்ததாகவும் பெருமிதத்துடன் கூறினர்.

இதைப்போல் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், உதயகிரி கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை உட்பட குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் எங்கும் கூட்டம் அலைமோதி வருகிறது.

x