விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி செஞ்சிக் கோட்டை, திருவக்கரை, மயிலம் கோயில் ஆகிய இடங்களில் இன்று பொதுமக்கள் குவிந்தனர்.
விழுப்புரம் அருகே பிடாகம், பேரங்கியூர் பகுதியிலுள்ள தென்பெண்ணையாற்றுப் பகுதிக்குச் சென்ற மக்கள், தங்கள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனர். இது போல எல்லீஸ் சத்திரம் பகுதி தடுப்பணை, மரக்காணம் கடற்கரைப் பகுதி, கோட்டக்குப்பம், ஆரோவில் சர்வதேச நகரப்பகுதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடும்பத்தினருடன் சென்று, காணும் பொங்கலைக் கொண்டாடினர். வீட்டிலிருந்து தயார் செய்துகொண்டு சென்ற உணவை குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.
செஞ்சிக்கோட்டையில் காணும் பொங்கலை முன்னிட்டு செஞ்சி மற்றும் செஞ்சியை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பல்வேறு ஊர்களிலில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். ராஜா கோட்டை, மற்றும் ராணிக்கோட்டை, ஆஞ்சநேயர் ஆலயம், வெங்கட்ரமணர் ஆலயம் உள்ளிட்ட இடங்களை ரசித்த வண்ணம் தங்கள் கொண்டுவந்த பொங்கல் மற்றும் திண்பண்டங்களை ஒன்றாகக் கூடி அமர்ந்து குடும்பத்தினர் அனைவரும் பகிர்ந்து உண்டனர். இந்துக்கள் மட்டுமல்லாது முஸ்லிம்களும் தங்கள் குடும்பத்தினருடன் காணும் பொங்கலை கொண்டாடினர்.
செஞ்சி பஸ் நிலையத்தில் இருந்து செஞ்சிக்கோட்டை சென்றுவர அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கோட்டைக்குள் சென்றவர்களிடம் போலீஸார் பலத்த சோதனை மேற்கொண்டனர். அப்போது சிலர் கொண்டுவந்த மது பாட்டில்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போன்று செஞ்சியை அடுத்த சிங்கவரம் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீஅரங்கநாதர் குடவரை கோயில், திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயில், கல்மரப் பூங்கா, பனைமலை தாளகிரீஸ்வரர் கோயில், மயிலம் முருகன் கோயில்களில் பொது மக்கள் குவிந்தனர்.
சினிமா திரையரங்குகள், பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் பெண்கள் அதிக நகைகளை அணிந்து வர வேண்டாம் என்று போலீஸார் தரப்பில் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளனர். பெண்களிடம் நகை திருடும் கும்பலையும், கேலி கிண்டலில் ஈடுபடுபவர்களையும் பிடிக்க சாதாரண உடைகளிலும் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.