சென்னை: பிரசிடென்சி கல்லூரியில் உருது துறை முடங்கிக் கிடக்கிறது. போதுமான பேராசியர்களை நியமித்து, கட்டமைப்பை மேம்படுத்தி மீண்டும் உருது துறையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனுக்கு எஸ்டிபிஐ கோரிக்கை வைத்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ”தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கல்லூரியான பிரசிடென்சி கல்லூரி என்று அழைக்கப்படும் மாநிலக் கல்லூரியானது, ஆயிரக்கணக்கான சான்றோர்களையும் ஆய்வறிஞர்களையும், அரசியல் ஆளுமைகளையும் உருவாக்கிய பாரம்பரியமான அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஏராளமான பெருமைகளைப் பெற்றுள்ள இந்த சுயாட்சிக் கல்லூரியானது, வரலாறு, அரசியல் அறிவியல், பொருளாதாரம், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், இந்தி இலக்கியம், உருது இலக்கியம் உள்ளிட்ட ஏராளமான துறைகளை தன்னகத்தே பெற்று ஆண்டுதோறும் நூற்றுக் கணக்கான பட்டதாரிகளை உருவாக்கி வருகிறது. ஆனால், சமீப ஆண்டுகளாக உருது இலக்கியத் துறைக்கு போதுமான பேராசியரியர்களை நியமிக்காத காரணத்தாலும், அந்த துறைக்கான கட்டமைப்பை மேம்படுத்தாத காரணத்தாலும், உருது துறையே முடங்கிக் கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பல பத்தாண்டுகளாக செயல்பாட்டில் இருந்த உருதுத்துறைக்கு மீண்டும் உயிரூட்டம் அளிக்கும் வகையில், அந்த துறைக்கு உடனடியாக போதுமான பேராசியர்களை நியமித்து, அதன் கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, முடங்கிக் கிடக்கும் உருது துறையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்” இவ்வாறு அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.