புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் தரும் முறையை கொண்டுவரக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலர் சலீம் இன்று கூறியதாவது: "புதுச்சேரி மாநிலத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. மானிய விலையில் அரிசியும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. அரிசிக்கு பதில் பணம் என்று நேரடியாக பயளாளிகளுக்கு பணம் வழங்கல் என்கின்ற முறையை புதுச்சேரியில் மட்டும் முன்னோட்ட திட்டமாக அமல்படுத்தப்பட்டது.
இதனால் பொதுமக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். பணம் வேண்டாம் அரிசி வேண்டும் என்று மக்கள் கோரினார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. என்.ஆர். காங்கிரஸ்-பாஜக அரசுக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர்.
இதனால் மீண்டும் ரேஷன் கடைகள் திறந்து பொது விநியோக திட்டத்தின் மூலமாக உணவுப் பொருட்கள் வழங்கப்படும். பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் தரும் முறை ரத்து செய்யப்படும், இதற்காக மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது என்று முதல்வர் தெரிவித்தார்.
ஆனால் இதுவரை ரேஷன் கடைகள் முழுமையாக திறக்கப்படவில்லை. பொது விநியோக திட்டமும் துவக்கப்படவில்லை .
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்படவில்லை. மாறாக ரூபாய் 750 தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது மக்கள் நலத்திற்கு முற்றிலும் எதிரான செயலாகும்.
பொங்கல் பண்டிகைக்கான உணவுப் பொருட்கள் தொகுப்பு பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்குவதில் இந்த அரசுக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை. தேர்தலில் மக்கள் பாடம் புகட்டியும் இந்த அரசு ஏன் இன்னும் திருந்தவில்லை. வங்கி கணக்கில் ரூபாய் 750/- வழங்கும் திட்டத்தை கைவிட்டு ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் உணவுப் பொருட்கள் தொகுப்பை விநியோகிக்க வேண்டும்" என்று சலீம் தெரிவித்தார்.