சென்னை: தாமிரபரணியில் திருநெல்வேலி மாநகரப் பகுதிக்குள் தற்போது வரும் நீரின் அளவு சுமார் 65 ஆயிரம் கன அடி அளவிற்கு உள்ளது. இது படிப்படியாக அதிகரித்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் செல்லக்கூடும் என அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி அருகில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்ட அணைகளில் இருந்து சுமார் 800 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ள போதிலும், திருநெல்வேலி மாநகரப் பகுதிக்குள் தற்போது வரும் நீரின் அளவு சுமார் 65 ஆயிரம் கனஅடி அளவிற்கு உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடர்ந்தால் இது படிப்படியாக அதிகரித்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் செல்லக்கூடும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் மற்றும் நீர் நிலைகளின் அருகில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அல்லது அரசு முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.