தொடர் மழை: தாடகை நாச்சியம்மன் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை - வனத்துறை உத்தரவு


தாடகை நாச்சியம்மன் கோயிலில் மகா தீபம் ஏற்ற சென்ற பக்தர்களை பாதுகாப்பு கருதி வனத்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

பொள்ளாச்சி: தொடர் மழை காரணமாக அடர்ந்த வனப்பகுதியில் 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள தாடகை நாச்சியம்மன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில், அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 2000 அடி உயரத்தில் தாடகை நாச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திருக் கார்த்திகை திருநாள் அன்று, ஒரு நாள் மட்டும் பக்தர்கள் மலையேறிச் சென்று இந்த கோயிலில் மகா தீபம் ஏற்ற வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தாடகை நாச்சியம்மன் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அலுவலகத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மனு அளித்திருந்தனர்.

வனப்பகுதியில் தீ மூட்ட கூடாது, பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு செல்லக்கூடாது, கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதியில் வீசி எறிய கூடாது, வனத்தின் தன்மைக்கோ அங்கு உள்ள வனவிலங்குகளுக்கோ எவ்வித இடையூறும் செய்யக் கூடாது. காலை 7 மணிக்கு மலை ஏற்றம் ஆரம்பித்து மாலை 4 மணிக்குள் திரும்பி விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இன்று தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பல்வேறு கோயில்களில் மலைகளின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்பட உள்ளது. தாடகை நாச்சியம்மன் கோயிலுக்கு செல்ல இன்று காலை 6 மணி முதலே கோபால்சாமி மலை அடிவாரத்தில் பக்தர்கள் குவிந்தனர். இதற்கிடையில் நேற்று முதல் தாடகை நாச்சியம்மன் கோயில் அமைந்துள்ள வனப்பகுதி மற்றும் ஆழியாறு, அர்த்தநாரிபாளையம், நவமலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்ததால் மலைப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ள தாடகை நாச்சி அம்மன்.

இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஓடைகளை கடந்து பக்தர்கள் செல்வது பாதுகாப்பற்றது என்பதால் வனத்துறையினர் தாடகை நாச்சியம்மன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்தனர். இதைத் தொடர்ந்து கோபால்சாமி மலை அடிவாரத்தில் சோதனைச் சாவடி அமைத்து பக்தர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். கார்த்திகை மகா தீபம் ஏற்ற வந்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

x