5.8 லட்சம் பட்டதாரிகள் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு


5 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதிய குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. தேர்வு முடிந்து 57 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்-பதிவாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளில் 507 காலியிடங்களையும், அதேபோல், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை தணிக்கை ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட குரூப்-2ஏ பதவிகளில் 1,820 காலியிடங்களையும் (மொத்தம் 2,327) நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது.

பட்டப்படிப்பை அடிப்படை கல்வித் தகுதியாக கொண்ட இந்த தேர்வுக்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அவர்களில் 7 லட்சத்து 93 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு கடந்த செப். 14-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடந்தது. இத்தேர்வை 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று மாலை 6.30 மணியளவில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் 57 நாட்களில் வெளியிடப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வு நடத்தப்படும் இத்தேர்வு குரூப்-2 பணிகளுக்கு விரிவாக விடையளிக்கும் வகையிலும், குரூப்-2-ஏ பணிகளுக்கு அப்ஜெக்டிவ் முறையில் விடையளிக்கும் வகையிலும் அமைந்திருக்கும். குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ இருவகை பணிகளுக்குமே நேர்முகத் தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

x