அரியலூர்: அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நலத் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவில் அவர் பேசியதாவது: கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக அதிக வாக்குகள் பெற்று, மாவட்டத்தில் 100 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளது. அரியலூர் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்று நிரூபணமாகியுள்ளது.
அதிமுக ஆட்சியில் நலத் திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தவறான தகவல்களைத் தெரிவித்து வருவது கண்டனத்துக்குரியது. அதிமுக ஆட்சியில் 14 மருத்துவக் கல்லூரிகள், ஜெயங்கொண்டத்தில் அரசு கலைக் கல்லூரி, 6 சட்டக் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை கொண்டுவரப்பட்டுள்ளன.
அனைத்துப் பகுதிகளிலும் மேம்பாலங்கள், சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஸ்டாலின் பொறுப்பேற்ற 46 மாதத்தில் ஒரு மருத்துவக் கல்லூரிகூட ண்டுவரவில்லை. விவசாயிகள் நலனில் அதிமுக அக்கறையுடன் செயல்பட்டது. விவசாயிகளை எப்போதும் அரவணைத்துக் கொள்ளும் இயக்கம் அதிமுக மட்டு தான். இதையெல்லாம் ஸ்டாலின் மறந்துவிட்டாரா? அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நலத் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி நடத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு பழனிசாமி பேசினார்.
அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கோகுல இந்திரா, காமராஜ், ப.மோகன், சின்னையா, கரூர் சின்னசாமி, கே.பி.அன்பழகன் உடனிருந்தனர்.