சென்னை: வங்கக்கடலில் உருவான ‘ஃபெஞ்சல்’ புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக, பலத்த வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியதால், நேற்று ஒரே நாளில் சென்னையின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக மாறின.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ஆவடியில் அதிகபட்சமாக 24 செ.மீ. மழை கொட்டியது. சென்னை, புறநகர் பகுதிகளில் 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாநகரில் 334 இடங்களில் நீர் தேங்கியது.
வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. சூறாவளி காற்றால் 27 மரங்கள் வேரோடு சாய்ந்தன. 6 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. 8 நிவாரண முகாம்களில் 193 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நேற்று மதியம் வரை 2.32 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முழுவதும் விடாமல் மழை பெய்ததால் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக, பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டன. வடபழனி, தியாகராய நகர், பிராட்வே, திருவான்மியூர், தாம்பரம், வியாசர்பாடி, அடையாறு, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் மழைநீர் தேங்கியது. விமான பயணிகளின் வசதிக்காக சென்ட்ரல், பிராட்வே, கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து விமான நிலையத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கனமழையால் கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, பல்லாவரம் பகுதிகளில் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. அதனால் புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது. பல்வேறு ரயில்கள் ஆவடி, திருவள்ளூர், அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டன. சென்னை சென்ட்ரல், எழும்பூருக்கு ரயில்கள் வருகை, புறப்பாடு தாமதமானது. சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 9 ரயில்கள் சென்னை கடற்கரை, திருவள்ளூரில் இருந்து புறப்பட்டன. புயலால் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கைகொடுத்த ‘மெட்ரோ’- பேருந்து, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மெட்ரோ ரயில்கள் பெரிய அளவில் பாதிப்பு இன்றி வழக்கம்போல இயக்கப்பட்டது மக்களுக்கு வசதியாக இருந்தது. சூறாவளி காற்று, கனமழை காரணமாக 55 விமான சேவைகள்ரத்து செய்யப்பட்டன. 20 விமானங்கள் ஹைதராபாத், பெங்களூரு, திருச்சி விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. சென்னை விமான நிலையம் நேற்று பிற்பகல் பகல் 12.30 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. பாதுகாப்பு கருதி பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அபராத தொகை இல்லாமல் டிசம்பர் 10-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ‘ஃபெஞ்சல்’ புயல் நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ‘ஃபெஞ்சல்’ புயல், வட தமிழக கரையை நெருங்கி, புதுச்சேரி அருகே நேற்று மாலை புயலாக கரையை கடந்தது. இதன் காரணமாக நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சென்னை மீனம்பாக்கத்தில் 11 செ.மீ. நுங்கம்பாக்கம், புதுச்சேரியில் 10 செ.மீ. திருத்தணியில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும்,வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல்,திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசும். இவ்வாறு அவர் கூறினார்.