ஃபெஞ்சல் புயல்: கொட்டித் தீர்த்த கனமழை! - ஃபெஞ்சல் புயல் தாக்கத்தின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் சனிக்கிழமை நீடித்தது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் நீடித்தது. பல இடங்களில் மழைநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பயிர்களும் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
ஃபெஞ்சல் புயல்: சூறைக்காற்று எச்சரிக்கை: ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால், ஞாயிற்றுக்கிழமையைப் பொறுத்தவரையில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் - ‘மாறுதல்கள்’ ஏன்? - “புயல் முழுமையாக கரையைக் கடப்பதற்கு சில மணி நேரங்கள் கூட ஆகலாம். அது, ஒவ்வொரு புயலின் அமைப்பைப் பொருத்தது. ஃபெஞ்சலைப் பொறுத்தவரை, சில சமயங்களில் 12 கி.மீ, சில சமயங்களில் 7 கி.மீ வேகம், சில சமயங்களில் 13 கி.மீ வேகத்தில் செல்கிறது. பல்வேறு காரணிகளுடன் தொடர்புடையதால், அதன் வேகத்தில் மாறுபாடு ஏற்படுகிறது. புயலைச் சுற்றியுள்ள மேககூட்டங்களைப் பொருத்துதான் மழை பொழிவு இருக்கும்.
புயல் என்பது ஒரு பரவியிருக்கக்கூடிய அமைப்பு. அதுவொரு சின்ன புள்ளி போன்றது அல்ல. அதனால்தான் காரைக்காலில் இருந்து மாமல்லபுரம் வரை என்றும் புதுவைக்கு அருகே என்றும் கூறுகிறோம். புயல் அமைப்பின் மையப்பகுதிக்கூட ஒரு சின்ன புள்ளியாக இருக்காது. அதுவே ஒரு 10-15 கி.மீ வரை இருக்கும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
எங்கெல்லாம் ரெட் அலர்ட்? - ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை எப்படி? - “கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதிகமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து பகல் 1.30 மணி வரையிலான நிலவரப்படி, நுங்கம்பாக்கத்தில் 97 மி.மீ, மீனம்பாக்கத்தில் 102 மி.மீ, மாமல்லபுரத்தில் 70 மி.மீ. சென்னை விஐடி வளாகம் 74 மி.மீ. , ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் 82 மி.மீ, பூந்தமல்லி 79 மி.மீ, கோளப்பாக்கம் 102 மி.மீ, புழல் 68 மி.மீ மழை பதிவாகியுள்ளது” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் சனிக்கிழமை பிற்பகலில் தெரிவித்தார்.
மழை நிவாரணப் பணிகள் - முதல்வர் விளக்கம்: முதல்வர் ஸ்டாலின் சனிக்கிழமை காலை சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறும்போது, “கடுமையான மழையை சமாளிக்கும் வகையில், முழுமையான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.
மேலும், “சென்னையில் எங்கு தண்ணீர் தேங்குமோ, அந்த இடத்திற்கு முன்கூட்டியே நாங்கள் அதற்குரிய நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம். அதனால் இப்போது எந்தவித பிரச்சனையும் இல்லை என்பதுதான் செய்தி. அப்படி இருந்தாலும் அது சமாளிக்கப்படும்” என்று அவர் கூறினார்.
பொதுமக்களுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் - ‘ஃபெஞ்சல்’ புயல் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் மிக அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் எனவும், கடற்கரை பகுதிகளுக்கு புயலை வேடிக்கை பார்க்க எக்காரணத்தை கொண்டும் செல்லக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், அரசு மேற்கொண்டு வரும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சாலைகளில் மழைநீர் - இபிஎஸ் விமர்சனம்: “ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. மக்கள் அனைவரும் சென்னை வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மழைநீர் வடிகால் பணிகள் என்று திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இனி இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறியுள்ளார்.
மேலும், “எனது அறிவுறுத்தலின்படி, அதிமுக ஐடி பிரிவின் சார்பில் Rapid Response Team அமைக்கப்பட்டுள்ளது. சென்னைவாழ் பொதுமக்கள் இந்தக் கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளை ரேப்பிட் ரெஸ்பான்ஸ் டீம் என்ற ஹேஷ்டேக் இட்டு, அதிமுக தன்னார்வலர்களை எந்நேரமும் சமூக வலைதளத்தில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்” என்று அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரி நிலை என்ன? - ‘ஃபெஞ்சல்’ புயலின் தாக்கம் காரணமாக, புதுச்சேரியில் சனிக்கிழமை காலை முதலே பலத்த காற்றுடன் மழை நீடித்து வந்தது. நகரின் ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இவற்றை அகற்றும் பணிகளில் தீயணைப்பு மற்றும் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டனர். புயலை எதிர்கொள்வதற்காக 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர். ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று புதுச்சேரி அரசு தெரிவித்தது.
சென்னையில் போக்குவரத்து சேவைகள் பாதிப்பு: சென்னை, புறநகர்ப் பகுதிகளில் நீடித்த கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் மின்சார ரயில் சேவை, சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையிலான MRTS ரயில் சேவை முற்றிலும் முடங்கின. அதேவேளையில், சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு இல்லை.
7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: புயலால் கனமழை பெய்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை 500 மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.