4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு


சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக 4 மாவட்டங்களின் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்திருப்பதாக தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ தமிழ்நாட்டில் வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக வலுவெடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் புயல் காற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள், மின் கட்டணத்தை அபராத தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கும் அருகே கடக்கக்கூடும் எனவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையம் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியிருப்பதால் நண்பகல் 12 மணிவரை இரவு 7 மணி வரை விமானநிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புறநகர் மின்சார ரயில் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

x