சென்னை: தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்றும் கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத் துறையின்கீழ் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறைகளின் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், கடந்த 2021-22 முதல் 2024-25 வரையில் இந்த 3 துறைகள் சார்பில் வெளியிடப்பட்ட மானியக் கோரிக்கை அறிவிப்புகள், முதல்வரின் அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை தொடர்ந்து பெருக்குதல், விவசாயிகளுக்கு தேவையான துறை சார்ந்த திட்டங்களை சிறப்பாகவும், தரமாகவும் வழங்க முதல்வர் அறிவுறுத்தினார்.
மேலும் இக்கூட்டத்தில், வேளாண்துறை சார்பில் நாகப்பட்டினம், நாகூரில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைத்தல், ஈரோட்டில் ரூ.10 கோடியில் மஞ்சள் ஏற்றுமதி மையம் தரம் உயர்த்துதல், தருமபுரியில் மா மகத்துவ மையம், திருநெல்வேலியில் நெல்லி மகத்துவ மையம் ஆகியவை ரூ.6 கோடியில் அமைக்கும் பணிகள், தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் ரூ.15 கோடியில் வாழை ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் கீழ் ரூ.65.30 கோடியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார்.
தமிழ் வளர்ச்சி: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் உலக அளவில் போற்றப்படும் தமிழ்ப் படைப்புகளை வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப்வேதநாயகத்துக்கு மயிலாடு துறையில் ரூ.3 கோடியில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கும் பணிகள், தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் உள்ள அரசு அச்சகபணியாளர்களுக்கு ரூ.34.54 கோடியில் புதிய குடியிருப்புகள். பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனாருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம், சிதம்பரத்தில் இளையபெருமாளுக்கு நூற்றாண்டு நினைவரங்கம் அமைத்தல், வள்ளுவர் கோட்டத்தில் ரூ.80 கோடியில் புனரமைப்பு பணி உள்ளிட்டவை குறித்தும் முதல்வர் ஆய்வு செய்தார்.
நவீன மீன் சந்தைகள்: கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளத் துறை சார்பில் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்துடன் இணைந்து சென்னை, காசிமேட்டில் உள்ள மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகள், கடலூர், பெரியகுப்பம், புதுக்குப்பம் மற்றும் சி.புதுப்பேட்டையில் ரூ.25 கோடியில் கடல் அரிப்பு தடுப்பு சுவர்களுடன் கூடிய புதிய மீன் இறங்குதளங்கள் அமைத்தல் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ரூ.50 கோடியில் நவீன மீன் சந்தைகள் அமைத்தல், அம்பத்தூர் பால் பண்ணையில் ரூ.10 கோடியில் பணிகள், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ரூ. 50 கோடி பால் பதப்படுத்தும் ஆலைக்கான பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது கடந்தாண்டுகளில் அறிவிக்கப்பட்டு நடைபெறும் பணிகளை துரிதமாக முடிக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில், துறை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மு.பெ.சாமிநாதன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம் பொதுப்பணித் துறை செயலர் மங்கத்ராம் சர்மா, வேளாண்துறை செயலர் அபூர்வா, நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலர் சத்யபிரத சாஹு, செய்தித்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.