மக்களுக்கு அரசின் சேவைகள் கிடைக்க பொது சேவை பெறும் உரிமை சட்டம்: ராமதாஸ் வலியுறுத்துவது என்ன?


பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் அரசின் சேவைகள் கிடைக்க பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களுக்கு தேவையான சாதி, பிறப்பு, இறப்பு, வசிப்பிடம், வருவாய், வாரிசு, பட்டா மாறுதல், திருமணப் பதிவு சான்றிதழ்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள், மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் ஆகிய சேவைகளை வழங்க வேண்டியது வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட தமிழக அரசுத் துறைகளின் பணி ஆகும்.

ஆனால், இந்த சேவைகளை தமிழக அரசின் துறைகள் சரியான நேரத்தில் வழங்குவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த சான்றுகளை பெறுவதற்கு லஞ்சம் வழங்கப்பட வேண்டியிருப்பதாகவும் புகார்கள் கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பயனின்றி போய்விட்ட நிலையில், தமிழக தலைமைச் செயலரின் வழிகாட்டுதல்களுக்கு எந்த அளவுக்கு மதிப்பளிக்கப்படும் என்பது தெரியவில்லை. மக்களுக்கு அனைத்து சேவைகளும் குறித்த காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக பாமக பரிந்துரைக்கும் ஒற்றைச் சட்டம் என்பது பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் தான்.

தமிழகத்தில் பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால், மக்களுக்கு சேவைகளை வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். குறித்த காலத்தில் அரசின் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும் சட்டத்தில் வகை செய்யப்படும். அதனால், அரசு அதிகாரிகள் குறித்த நேரத்தில் சேவை வழங்குவார்கள்.

பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அந்த மாநிலங்களை விட தமிழகத்தில் தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது.

எனவே, தமிழக மக்களுக்கு அரசின் சேவைகள் குறித்த காலத்தில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருந்தால் டிச.9-ம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவையின் கூட்ட தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x