அதிமுக, பாஜக நிர்வாகிகள் வீடு உட்பட புதுக்கோட்டையில் 5 இடங்களிலும், திண்டுக்கல்லில் தொழிலதிபர் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள கடுக்காகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது சகோதரர் பழனிவேல். இருவரும் கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறையில் ஒப்பந்தம் பெற்று, தமிழகம் முழுவதும் சோலார் விளக்குகளைப் பொருத்தும் பணியை மேற்கொண்டனர்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் இவர்களது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். மேலும், முருகானந்தம், அவரது மனைவி காந்திமதி மீது ஒப்பந்த பணிகளை முறைகேடாக மேற்கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அதிமுகவில் இருந்து விலகிய முருகானந்தம், பாஜகவில் இணைந்து, தற்போது அக்கட்சியின் வடக்கு மாவட்டப் பொருளாளராக பொறுப்பு வகிக்கிறார். பழனிவேல் அதிமுக நிர்வாகியாக இருக்கிறார்.
இந்நிலையில், முருகானந்தம், பழனிவேல், அவர்களது சகோதரரும், துணை வட்டார வளர்ச்சி அலுவலருமான ரவிச்சந்திரன் ஆகியோரது வீடுகள், புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தத்துக்கு சொந்தமான வீடு, இவர்களுடன் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்ட ஆலங்குடி பழனிவேல் வீடு ஆகிய 5 இடங்களில் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை நடைபெற்ற இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
3-வது முறையாக சோதனை: திண்டுக்கல்லைச் சேர்ந்த ரத்தினம், கல்லூரி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். மேலும், ரியஸ் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் உள்ள இவரது தரணி குழும அலுவலகத்தில் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை சோதனை தொடர்ந்தது.
இவர் பண மதிப்பு இழப்பு நடவடிக்கையின்போது, சேகர் ரெட்டிக்கு ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொடுத்து உதவியதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், சிபிஐ ரத்தினத்தைக் கைது செய்தது. ஏற்கெனவே இவரது வீடு, அலுவலகங்களில் 2 முறை வருமான வரி, அமலாக்கத் துறை சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது