உதகை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தேவைப்பட்டால் பழனிசாமியிடமும் விசாரணை நடத்தப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் ஏன் விசாரிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீஸார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகி, புலன் விசாரணை நடைபெற்று வருவதால் காலஅவகாசம் கேட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன், “கொலை, கொள்ளை நடைபெற்ற கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை” என்றனர்.
இதற்கு, “குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பினர், சம்பவம் நடைபெற்ற கோடநாடு பகுதியில் ஆய்வு செய்ய அனுமதிக்க முடியாது” என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி முரளிதரன், விசாரணையை டிச. 20-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். பின்னர், அரசு வழக்கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அதிமுக நிர்வாகி சஜீவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. புலன் விசாரணையின்போது, ஒவ்வொருவரையும் விசாரிக்க வேண்டியது அதிகாரியின் கடமை. பழனிசாமியிடம் விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கு விசாரணையின்போது, பழனிசாமியை எதிரிதரப்பு சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், தற்போது வழக்குவிசாரணை நடந்து கொண்டிருப்பதால், யாரை விசாரிக்க வேண்டும் என்பதை விசாரணை அதிகாரிகள்தான் முடிவு செய்வார்கள். தேவைப்பட்டால் பழனிசாமியிடமும் விசாரணை நடத்தப்படும்.
வழக்கில் தொடர்புடையவர்கள், தகவல்கள் மற்றும் ஆதாரங்களை முன்வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு தரப்பு சாட்சியாக இருந்தாலும் அல்லது எதிரி தரப்பு சாட்சியாக இருந்தாலும் நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள். விசாரணையின்போது கிடைக்கும் தகவலின் அடிப்படையில், யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம்" என்றார்.