திருவாரூர்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார். உதகை ராஜ்பவனில் தங்கியுள்ள அவர், நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கோவையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவரின் திருவாரூர் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.