கோவையில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பிரச்சினைக்கு தீர்வு: விவசாயிகள் வலியுறுத்தல்


விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்ப சங்கத்தினர் வலியுறுத்தினர். படம்: ஜெ.மனோகரன்

கோவை: கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் வரை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மோ.ஷர்மிளா தலைமை வகித்தார். கூட்டத்தில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை நார் கழிவுகள் மூலம் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்கவும், நொய்யல் பாசன குழு அமைக்கவும், இலவச மின் இணைப்பு விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

காட்டு பன்றி தொந்தரவை கட்டுப்படுத்தவும், பொள்ளாச்சி மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளில் நடைபெறும் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும், நொய்யல், கௌசிகா நதி மற்றும் பவானி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், சட்டபூர்வமற்ற நில அபகரிப்புகளை தடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் சிறுதானியம் சாகுபடி குறித்த சோளம் தொழில்நுட்ப கையேடு, கம்பு சாகுபடி தொழில்நுட்ப கையேடு, ஆகியவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் வெளியிட்டு, விவசாயிகளுக்கு வழங்கினார். முன்னதாக, விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தினர்.

x