மழைக் காலத்தால் குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகரிப்பு - மதுரை மருத்துவர்கள் தகவல்


மதுரை: மழை காலத்தால் தினமும் காலையில் நனைந்துகொண்டே குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்கின்றனர். அதனால், மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் பாதிப்புடன் குழந்தைகள் வருகை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது மதுரையில் இந்த மழை சுமாராகதான் பெய்து வருகிறது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மாதம் மழை குறைவுதான். ஆனால், மேகம் மூட்டமும், காலை, மாலை நேரங்களில் தூறல் மழையும் பெய்துகொண்டு இருக்கிறது. இந்த தூறல், சரியாக காலை 6 மணி முதல் 9 மணி வரை விட்டுவிட்டு பெய்கிறது. அதனால், மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில்லை.

பள்ளி குழந்தைகள், தினமும் இந்த தூறல் மழையில் நனைந்துகொண்டே பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். சில இடங்களில் காலை நேரத்தில் நல்ல மழையும் பெய்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படாததால் குழந்தைகளை பெற்றோர்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துவிடுகின்றனர். தனியார் பள்ளி மாணவ, மாணவிகள், பள்ளி பஸ், வேன்களிலும், ஆட்டோ மற்றும் பெற்றோருடன் அவர்கள் வாகனங்களிலும் பாதுகாப்பாக பள்ளிகளுக்கு சென்றுவிடுகின்றனர்.

அவர்களிலும், ஏராளமான பெற்றோர்கள் இரு சக்கர வாகனங்களில் குழந்தைகளை பள்ளிகளுக்கு கொண்டு போய் விடுகின்றனர். அதனால், அவர்களுடனே நனைந்து கொண்டே குழந்தைகள் பள்ளிகளுக்கு போகின்றனர். அரசு பள்ளிகளை பொறுத்தவரையில் பெரும்பாலும் மாணவ, மாணவிகள், தனியாகவே பஸ்களிலும், ஆட்டோக்களிலும் வந்து செல்கிறார்கள். பலர் வீடுகளில் இருந்து நடந்து வருகிறார்கள்.

குறைவான பெற்றோர்களே, தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு கொண்டு வந்துவிட்டு செல்கின்றனர். நேற்று மாலையில் பள்ளி முடிந்து வீடுகளுக்கு வரும்போதும் தூறல் மழை இடைவிடாமல் பெய்தது. ஆங்காங்கே லேசான மழை பெய்தது. இன்று வழக்கம்போல் மழைத்தூறலில் நனைந்தும், சாலைகளில் தேங்கிய தண்ணீரை கடந்தும் மிகுந்த சிரமத்துடனே மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குச் சென்றனர். அதனால், கடந்த சில வாரமாகவே காலை நேர மழையில் குழந்தைகள், பள்ளிகளுக்கு தூறல் மழைக்கு நனைந்துகொண்டே செல்வதால் அவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகள் அதிகமாக வரத் தொடங்கியிருக்கிறது.

தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் குழந்தைகள் நல சிகிச்சைப்பிரிவுகளில் காய்ச்சல், சளிக்கு அதிகளவு குழந்தைகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் கடந்த வாரம் 60 முதல் 70 காய்ச்சல் நோயாளிகள் சிகிச்சைக்கு வந்திருந்தனர். அவர்களில் மிக குறைவானவர்களே குழந்தைகளாக இருந்துள்ளனர். இந்த வாரம், காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை 80 முதல் 90 ஆக உயர்ந்தது. இவர்களில் குழந்தைகளும் சிகிச்சைக்கு வரத்தொடங்கியிருப்பதாக மருத்துவர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

x