புதுச்சேரி: புதுச்சேரியை மத்திய நிதிக்குழுவில் சேர்க்க பிரதமருக்கு நெருக்கமான துணைநிலை ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "புதுச்சேரியை ஆளும் பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசானது மத்திய அரசிடம் இருந்து மாநில உரிமைகளை பெறுவதிலும், மாநில சீர்கேடுகளை தடுத்து நிறுத்தவதிலும் முழுமையாக தவறியுள்ளது. புதுச்சேரி மாநில மக்களுடைய நீண்ட நெடுநாள் கோரிக்கை மாநில அந்தஸ்தாகும். துணை நிலை ஆளுநருக்கும், ஆளும் அரசுக்கும் அதிகார பகிர்வு சம்பந்தமான பிரச்சனை ஏற்படும் போது மட்டும் மாநில அந்தஸ்து பெறுவோம் என அரசு தம்பட்டம் அடிப்பதிலும், சட்டப்பேரவையில் அது சம்பந்தமான தீர்மானத்தை இயற்றுவதிலும் வெற்று வீரத்தை காட்டி வருகிறது.
மாநில அந்தஸ்து சம்பந்தமான சட்டப்பேரவை தீர்மானத்தை மத்திய அரசிடம் எம்எல்ஏ-க்களோடும், அனைத்து கட்சி தலைவர்களோடும் கொண்டு செல்ல கூட யாரும் முன்வராமல் அப்பிரச்சினையை முழுமையாக கிடப்பில் போட்டுள்ளனர். தற்போது நாடு முழுவதும் 2026 ஏப்ரல் மாதத்தில் இருந்து 5 ஆண்டு காலத்துக்கான 16-வது நிதிக்குழு மத்திய அரசால் அமைக்கப் பட்டுள்ளது. அந்த நிதிக்குழு தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நிதி பகிர்வு சம்பந்தமான கருத்துக்களை கேட்டறிந்து வருகிறது. ஆனால் புதுச்சேரியை ஆளும் அரசானது இப்பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தாமல் வெறும் பார்வையாளராக மட்டும் இருந்து வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து வசூல் செய்யப்படும் மத்திய கலால் வரி, சுங்க வரி, வருமான வரி, தனியார் துறைமுகம் சுங்க வரி உள்ளிட்ட பல விதங்களில் ஆண்டுக்கு பல்லாயிர கோடிக்கணக்கான ரூபாய் புதுச்சேரியில் இருந்து மத்திய அரசுக்கு வரியாக வசூல் செய்யப்படுகிறது. ஆனால் அதில் ஒரு ரூபாய் கூட நமக்குரிய பங்கை மத்திய அரசு வழங்குவதில்லை. அது மட்டுமல்லாமல் மத்திய அரசு நமக்கு வழங்கும் நிதியுதவியும் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. 100 சதவீத மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்ட நிதியும் மற்ற மாநிலங்கள் போன்று நமக்கு வெறும் 60 சதவீதம் மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது.
மீதமுள்ள 40 சதவீதம் நம்முடைய சொந்த நிதியில் மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்தும் அவல நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கின்றோம். சட்டப்பேரவை தலைவர் ரூ.600 கோடி செலவில் புதிய சட்டப்பேரவை கட்ட மத்திய நிதியமைச்சரை 21-வது முறையாக சந்தித்து மனு அளித்துள்ளார். புதிய நாடாளுமன்றமே ரூ.875 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரி அரசுக்கு புதிய சட்டப்பேரவை கட்ட ரூ.600 கோடி தேவையா? என்பதை அரசு உணர்ந்ததாக தெரியவில்லை. நம்முடைய அனைத்து பிரச்சினைக்கும் ஒரே தீர்வு என்பது மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்ப்பது மட்டும்தான்.
நீண்ட நிர்வாக அனுபவம் கொண்ட நம் நாட்டு பிரதமருக்கு மிக நெருக்கமான இந்திய ஆட்சி பணி முடித்த மாநில துணை நிலை ஆளுநர், புதுச்சேரி அரசுடன் இணைந்து மத்திய அரசை நேரடியாக வலியுறுத்தி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை மத்திய நிதிக் குழுவில் சேர்ப்பதற்கான உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். மாநிலத்தின் பல்வேறு பிரச்சனைகளில் அதிகம் நாட்டம் கொண்டு செயல்படும் பாஜகவும், சட்டப்பேரவை தலைவரும், துணை நிலை ஆளுநரும், முதல்வரை டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய நிதி அமைச்சரை நேரில் சந்தித்து மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி மாநிலத்தை உடனடியாக சேர்க்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று அன்பழகன் கூறியுள்ளார்.