உதகை: நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் லட்சுமி பவ்யா, அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 78 ஆயிரத்து 961 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்காளர் நிலவரம்: "உதகை சட்டப்பேரவை தொகுதியில் (108), 93,942 ஆண் வாக்காளர்கள், 1,02,805 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 11 பேர் என மொத்தம் 1,96,758 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். கூடலூர் சட்டப்பேரவை தொகுதியில் (109 தனி) 93,722 ஆண் வாக்காளர்கள், 99,546 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 4 பேர் என மொத்தம் 1,93,272 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
குன்னூர் சட்டப்பேரவை தொகுதியில் (110), 89,338 ஆண் வாக்காளர்கள், 99,589 பெண் வாக்காளர்கள், 4 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 1,88,931 வாக்காளர்கள் உள்ளனர். மூன்று சட்டப்பேரவை தொகுதிகளிலும் சேர்த்து 2,77,002 ஆண் வாக்காளர்கள், 3,01,940 பெண் வாக்காளர்கள், 19 திருநங்கைகள் என மொத்தம் 5 லட்சத்து 78 ஆயிரத்து 961 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை விட தற்போது நீலகிரி மாவட்டத்தில் 2,119 வாக்காளர்கள் கூடுதலாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் கோட்டாட்சியர் சங்கீதா மற்றும் அரசியல் கட்சியினர் இன்றைய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் போது உடனிருந்தனர்.