சான்றிதழ்களுக்கு விலை பட்டியல் அச்சிட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டி: சாத்தான்குளம் அருகே பரபரப்பு


தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பாக அரசுச் சான்றிதழ்களுக்கான விலைப் பட்டியல் போடப்பட்டு ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றியம் கொம்பன்குளத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலராக பிரபா கனி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலையில் கிராம நிர்வாக அலுவலக சுவரில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.

அதில், 'கொம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலகம் விலைப்பட்டியல் - சாதி, வருமானம், இருப்பிடம் ஆகிய சான்றிதழ்கள் பெற ரூ.200 எனவும், இறப்பு, பட்டா, சிட்டா என சான்றிதழ் பெற குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்திருந்ததுடன் கிராம நிர்வாக அலுவலர் பெயரையும் அவரது செல்போன் எண்ணையும் அச்சிட்டு, கூகுள்பே-யில் பணம் செலுத்தலாம். கடன் கிடையாது. தயவு செய்து ஒத்துழைக்கவும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், இந்த சுவரொட்டி சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் சுவரொட்டியை உடனடியாக அப்புறப்படுத்தினர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பிரபா கனியிடம் கேட்டபோது, ''யாரோ சிலர் வேண்டுமென்றே எங்களை களங்கப்படுத்தும் நோக்கில் சுவரொட்டி ஒட்டிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்'' என்றார். இது குறித்து சாத்தான்குளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x